"You fail to see the endless sky,When you have a tunnel vision.குறுகிய பார்வை இருக்குமாயின்முடிவற்ற வானத்தை உன்னால் பார்க்க இயலாது"
வால்ட் டிஸ்னி- அனிமேஷன் படங்கள்
ஜார்ஜ் லூகாஸ்- ஸ்டார் வார்ஸ் சீரிஸ்
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்- மெகா பட்ஜெட்கள்
ஆல்ப்ரேட் ஹிட்ச்கோக்- சஸ்பென்ஸ் படங்கள்
![]() |
Walt Disney |
![]() |
George Lucas |
![]() |
Steven Spielberg |
![]() |
Alfred Hitchcock |
இவர்களைப் போன்ற வரலாற்றின் தலைசிறந்த பட எழுத்தாளர்கள்/இயக்குனர்கள் தங்களது சிந்தனையாலும் எழுத்தாலும் காலம் கடந்து நிற்கின்றனர். அவர்கள் வரிசையில் நான் கண்டு வியந்த ஒருவர் பற்றியும், அவரால் இப்போது பிரமாண்டமாக விரிந்து நிற்கும் மார்வெல் படங்களை பற்றியும் ஒரு நீண்ட அலசல்.
நாம் திரையில் காணும் ஒட்டு மொத்த அவெஞ்சர்ஸ் கதையும், அவெஞ்சர்ஸ்களின் கதைகளும், அதன் உள்ளடக்கமாக வரும் TV ஷோக்களும் ஒரே தொடர்ச்சியாக, ஒரே களத்தில் ஒரே உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள். அவெஞ்சர்ஸ்- உலகை உலுக்கும் அச்சுறுத்தல்களை தடுக்கும் சக்திகள். மார்வெல் TV ஷோக்களில் வரும் Daredevil, Jessica Jones, Iron Fist, Luke Cage போன்றவர்கள் நமது அருகில், அக்கம்பக்கத்தில், தெருக்களில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் The Defenders எனப்படும் கூட்டு ஹீரோக்கள்.
கூடவே Agent Carter, Agents of SHIELD, Inhumans, என வேறு டிவி தொடர்களையும் ஒருங்கிணைத்துக் கூற பயன்படுத்தும் சொல் தான் 'மார்வெல் சினிமா பிரபஞ்சம்/Marvel Cinematic Universe'. பயன்பாட்டுச் சுருக்கமாக 'MCU'
அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் மூலம், மார்வெல் ஸ்டுடியோஸ் தனது MCUவின் 10ஆம் ஆண்டில் காலடி வைக்கின்றது. அதனை கொண்டாடும் விதமாக MCU வின் வரலாற்றையும் அதன் வெற்றிக்கான காரணங்களையும், பின்னாளில் அவெஞ்சர்ஸ் கதைகள் எவ்வாறு படமாகலாம் எனவும், குறைந்தது 8ல் இருந்து 10 கட்டுரைகளாக எழுத முடிவெடுத்துள்ளேன். குறிப்பாக MCU வின் தந்தையாக இருந்து தொடக்கம் முதல் அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பாடுபடும் மார்வெல் ஸ்டுடியோசின் தலைவர் அவர்களை பற்றியும் எழுதவும் எனது நீண்ட நாள் ஆசை. நான் ரசித்ததைப் போல் MCUவை உங்களையும் ரசிக்க வைக்கவே இந்த ஒரு முயற்சி. முழு கட்டுரைகளையும் படித்த பின்பு இப்போ ரசிப்பதை விட மேலும் பல மடங்கு நீங்கள் MCUவை ரசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
கட்டுரை:1 MCU உருவான வரலாறு
MCU உருவாக்கத்திற்கு முன்பு, காமிக் புத்தகங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த Marvel Comics நிறுவனம் 'மார்வெல் என்டேர்டைன்மெண்ட்' எனும் பெயரில் தங்களது காமிக் கதாபாத்திரங்களை, வேறொரு படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் கைக் கோர்த்து தனித்தனி படங்களாக தயாரித்து வெளியிட்டு வந்தது. உதாரணத்திற்கு;
'New line cinema' உடன் Blade series
'Universal' உடன் Hulk
'Columbia Pictures' உடன் Spider-man
'20th Century Fox' உடன் X-Men series
இவைகளில் குறிப்பாக ஸ்பைடர்மேன் 1,2 & X-மென் 1,2 ஆகியன சூப்பர்ஹீரோ படங்களின் வெற்றிகளை உலகிற்கு உரக்கச் சொன்ன படங்கள். நான்குமே மக்கள் மத்தியிலும், வியாபார ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்று நவீன கால சூப்பர்ஹீரோ படங்களுக்கு வேராக இருந்தன. குறிப்பாக காமிக் விரும்பிகளுக்கு. தங்களுக்கு விருப்பமான காமிக் கதாபாத்திரங்களை வெறுமனே புத்தகங்கள் மற்றும் உயிரில்லா டிவி கார்ட்டூன் படங்களாகவே பார்த்த அவர்களுக்கு, பெரிய திரையில் நிஜ நடிகர்கள் நடித்து பெரிய பட்ஜெட்களில் பார்க்கும்போது மெய் சிலிர்த்து ரசிக்கத் தொடங்கினர்.
நவீன கால சினிமா உலகில் ஒரு புதிய புரட்சி உருவாகிக் கொண்டு இருப்பதை அமைதியாக அருகில் இருந்து கவனித்துக் கொண்டு வந்தார் அந்த மனிதர். X-மென் முதலாம் படத்தில் இணை-தயாரிப்பாளராக பணியாற்றிக் கொண்டு இருந்த அவர் அப்போ 25+ வயதில் இருந்தாலும் 15 வயது சிறுபையன் போல் காமிக் புத்தகங்களின் வெறியனாக இருந்தவர். X-மென்:1 பட தயாரிப்பின் ஒவ்வொரு காட்சியிலும் தான் ரசித்த காமிக் புக் விஷயங்கள் மக்களுக்கு பெரிய திரையில் தெரிய வேண்டும், அவர்களும் ரசிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்து வேலை செய்து வந்தார். இளம் வயதில் இவ்வளவு துடிப்பாக செயல்படுவதை கண்டுக்கொண்ட அப்போதைய மார்வெல் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி- Avi Arad, அந்த மனிதரை அழைத்து தனக்கு கீழ் செயல்படும் second-in-commandஆக துணை நிறுவனராக, தனது மார்வெல் நிறுவனத்தில் பணி புரிய அழைத்தார். காமிக் உலகமே தன் உலகம் என வாழ்ந்து வந்த அந்த மனிதனுக்கு அந்த உலகையே கட்டி ஆளும் ஒரு பொறுப்பு தேடி வர, முழு மனதாக ஏற்று கொண்டார்.
![]() |
Avi Arad |
நிர்வாக இயக்குனராக அவர் பணியாற்றிய Spider-man 2 படத்தின் உச்சகட்ட பெரும் வரவேற்பு, 'அந்த' ஒரு யோசனையை முதன் முதலாக அவரின் மூளையில் விதைக்கிறது. (இணைத்தயாரிப்பு மட்டுமே கவனிப்பதால் தயாரித்த படங்களின் வசூலில் ஒரு சிறு பகுதி மட்டுமே மார்வெல்க்கு வந்து சேரும். மற்றவை எல்லாம் படத்தை தயாரிக்கும் பெரும் நிறுவனத்துக்கே போய் சேரும்). அந்த யோசனை யாதெனில்- ' நம் காமிக்ஸ் கதாபாத்திரங்களை மற்ற நிறுவனங்களுக்கு உரிமைகளைக் கொடுத்து தயாரிக்க சொல்லாமல், ஏன் நாமலே தயாரித்து முழு கட்டுப்பாடையும் நம்மிடமே வைத்து கொள்ளக்கூடாது' என. இந்த யோசனையை தனது மேன்மை அதிகாரி- Avi Arad இடம் சொல்கிறார், அந்த மனிதர். இதை Avi Arad தொடக்கத்தில் விரும்பவில்லை. Avi Arad ஸ்பைடர்மேன் படங்களை தயாரிப்பதில் குறியாக இருந்தார். ஆனாலும் அந்த மனிதர் விடாமல், நிறுவனித்தில் இருக்கும் மற்ற அதிகாரிகளிடம் தனது கனவை முழுதாக விளக்கி ஒரு வழியாக அனைவரையும் சம்மதிக்க வைக்கிறார். Avi Aradக்கு இது பிடிக்காமல் போக, தலைமை பொறுப்பில் இருந்து விலகி மார்வெல் நிறுவனத்தை விட்டு வெளியேறி SONY நிறுவனத்திற்கு செல்கிறார். Avi Arad வெளியேற, நிறுவனத்தை வழிநடத்த யாரும் இல்லாமையால் அந்த மனிதனின் யோசனையையும் மற்றவர்கள் கைவிட, வேறு வழியில்லாமல் மார்வெல் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தை நிர்வாகிக்கும் பொறுப்பை தானே முழுமையாக ஏற்றுக்கொண்டார் அவர்.
2007ல் மார்வெல் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக, தனியாக படங்கள் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அந்த துணை நிறுவனத்தின் பெயர்- MARVEL STUDIOS. 33 வயதில் தனது வாழ்நாள் கனவை 2005ல் செயல் படுத்த தொடங்கினார் அந்த மனிதர். தனது மேன்மை அதிகாரிகளிடம் சொன்ன அந்த யோசனை, அவரது வாழ்நாள் கனவு இது தான்- "5 காமிக்ஸ் சூப்பர்ஹீரோ படங்கள் தனித்தனியாக தயாரித்து ரிலீஸ் செய்து, பின்பு அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு பெரிய படம் செய்யலாம்". காமிக்ஸ் புத்தகங்களில் இந்த மாதிரி செயல்பாடு நிறையவே வந்து இருந்தாலும், இதை வெள்ளித்திரை படங்களாக மாற்றுவது அப்போது விபரீத முயற்சியாகவே பார்க்கப்பட்டது. யாராக இருந்தாலும் துணிந்து தயாரிக்க மிகவும் யோசிப்பார்கள். யோசித்தார்கள்.
ஆனால் MARVEL STUDIOS துணிந்தது. அந்த மனிதர் துணிந்தார். 2006ன் தொடக்கத்தில் அந்த 5 சூப்பர்ஹீரோக்கள் யாரெனவும் முதலில் எந்த ஹீரோவின் தனி படத்தை ஆரம்பிக்கலாம் என யோசித்து IRON-MAN, HULK, CAPTAIN AMERICA, THORஐ தேர்வு செய்து, தனது கனவின் தொடக்கமாக, மார்வெல் சாம்ராஜ்யத்தின் ஆதியாக IRON MANஐ முதல் படமாக தேர்வு செய்து செயல் படுத்த தொடங்கினார்.
ஐயன்-மேன்னை தேர்வு செய்தது மாபெரும் விபரீத முயற்சி ஆக தோன்றியது. ஏன் என்றால் முற்றிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் மட்டுமே ஐயன் மேன்னை திரையில் கொண்டு வர முடியும். பட்ஜெட் செலவும் அதிகமாகும். அது மட்டும் இன்றி அந்த வருடத்தில் ரிலீஸ் ஆன மற்றொரு சூப்பரஹீரோ படமான Spider-Man:3 ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றது. ஆதலால் அனைவரும் ஐயன்-மேன் படம் தோல்வியே ஆகும் என முடிவுடன் இருந்தனர். எவ்வளவு விமர்சனம் வந்தாலும் தனது கனவில் உறுதியாக இருந்த அந்த மனிதன், ஐயன் மேன்னை உருவாக்கும் நோக்கத்தில் துரிதமாக இருந்தார்.
படத்தின் பெரும் பட்ஜெட்டை நிவர்த்தி செய்ய, படத்திற்கு பைனான்ஸ் செய்து பண உதவி அளிக்க வைக்க, அந்த மனிதன் ஒரு திட்டம் தீட்டினார். பெரும் செலவில் ILM எனும் நிறுவனம் மூலம், சுமார் ஒரு நிமிடம் ஓடக் கூடிய காட்சி ஒன்றை முழுக்க கிராபிக்சில் ஐயன் மேன் பறந்து செல்வதைப் போன்று உருவாக்கி அந்த காட்சியை டெஸ்ட் footage ஆக ரிலீஸ் செய்ய, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. இது வரை யாரும் ஐயன் மேன்னை பெரிய திரையில் பார்க்காததால், அந்த டெஸ்ட் footage கொடுத்த நம்பிக்கை & ஆர்வம், படத்தை பைனான்ஸ் செய்ய பலரை உந்தியது.
Iron-Man test footage: https://youtu.be/UmIwqzJvlsA
பட்ஜெட் ஒருவழியாக சரியான பின்பு, மற்றொரு பெரும் தலைவலி வந்தது. ஐயன் மேன் நடிகராக யாரை நடிக்க வைப்பது என!. ஐயன் மேன்னை திரைக்கு கிராபிக்ஸ் உதவியுடன் எளிதில் கொன்டு வந்து விடலாம் ஆனால் படத்தின் மொத்த பாரமும் டோனி ஸ்டார்க் எனும் மனிதக் கதாபாத்திரம் மேல் உள்ளமையால், அதற்கான சரியான நடிகரை தேர்வு செய்வதில் குழப்பம் ஆனது. நிறைய குழப்பங்களுக்கு பின் Robert Downey Jr. தேர்வானர். ராபர்ட் தனது திரை உலக வாழ்வின் இரண்டாம் இன்னிங்ஸை அப்போது தான் ஆரம்பித்து இருந்தார். 2003க்கு முன்பு வரை குடி மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிறைக்கு சென்று போதை பழக்கம் விட்டு போக ஆஸ்ரமங்களில் தஞ்சம் புகுந்து முற்றிலும் வேறு மனிதராக 2003ல் வந்தார் ராபர்ட் டௌனே. அவரை அவெஞ்சர்ஸ் தலைவனாகவும் டோனி ஸ்டார்க் ஆகவும் பார்க்க ரசிகர்கள் மற்றும் தயாரிப்பு தரப்பில் எதிர்ப்பு வலுத்தது. ராபர்ட் நடித்துக் காட்டிய ஆடிஷன் காட்சி மற்றும் கதையின் மேல் கொண்ட நம்பிக்கை, ராபர்ட் தான் தனது ஐயன் மேன் என்பதை மனதில் உறுதியாக்கியது அந்த மனிதனுக்கு. MCU வின் தலைவன்/டோனி ஸ்டார்க்/ஐயன் மேன் இவர்தான் என MCU அறிமுக விழா ஒன்றில் ராபர்ட்டை தடாலடியாக அறிவித்தார் அந்த மனிதர்.
சர்ச்சைகள் தாண்டி, 2008ல் மே மாதம் IRONMAN ரிலீஸ் ஆனது. பட்டித் தொட்டியெங்கும் வசூலில் பட்டையைக் கிளப்பியது. யாரும் எதிர்பாரா வண்ணம் ராபர்ட் உலக புகழ் பெற்றார்- ஒரே படத்தில்- டோனி ஸ்டார்க்காக. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், பேட்மேன் மட்டுமே தெரிந்து வளர்ந்த குழந்தைகள் ஐயன் மேன் மேல் காதல் கொண்டனர். ஐயன் மேன் பொம்மைகள் வரலாற்று சாதனையாக விற்று தீர்ந்தன. இளைஞர்கள் டோனியை போல் மீசையும் தாடியும் வைக்க தொடங்கினர்.
ஐயன் மேன் படத்தை விட, படத்தில் அவெஞ்சர்ஸ்காக கொடுக்க பட்ட ஒரு தொடக்கம்/Lead இன்னும்பரபரப்பாக பேசப்பட்டது. வெறுமனே படத்தின் கதையில் ஆங்காங்கே லீட் கொடுக்காமல், படம் முடிந்து படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரையும் end cardல் நன்றி செலுத்திய பின், அடுத்த படத்துக்கான தொடக்கம் கொடுக்கும் காட்சிகளை வைக்க அந்த மனிதர் முடிவு எடுத்தார். இவ்வாறு செய்கையில் இந்த படக் கதையின் ஓட்டத்தையும் பாதிக்காமல், அடுத்த படத்தின் டீஸராகவும் உறுத்தலாக தெரியாமல், இந்த படத்தின் ஒரு அங்கமாகவும் ஒரு தொடர்ச்சியாகவும் பார்க்க வைக்கலாம் என சமயோசிதமாக செயல்படுத்தினார். பின்னாளில் இந்த end-credit காட்சிகளே மார்வெல்லின் தனித்துவம் ஆகி நிற்கிறது.
ஐயன் மேன்னை தொடர்ந்து Hulk, Iron Man2, பின்பு Thor, அப்புறம் கேப்டன் அமெரிக்கா என நான்கு படங்களை வெளியிட்டார் அவர். எல்லாமே ஹிட் ஹிட் ஹிட். ஹாலிவுட் வட்டாரமே வியந்து பார்த்தது. நான்கு ஹீரோகளுமே எளிதில் திரைக்கு கொண்டு வர இயலாத கதாபாத்திரங்கள். நான்கு பேரையும் இதற்கு முன் திரையில் யாருமே கண்டது இல்லை. ஆனாலும் ஒவ்வொரு படமும் பெரும் லாபத்தை சம்பாதித்தது. இணையதளங்கள் முழுக்க அவெஞ்சர்ஸ் யார் அவர்களுக்கும் டோனி ஸ்டார்க்கிற்கும் என்ன சம்பந்தம்? தோர் கதை தான் என்ன? கேப்டன் அமெரிக்கா என்ன ஆவான்? என விவாதிக்க தொடங்கினர். அவெஞ்சர்ஸ் பற்றி தெரியாதவர்கள் கூட இணையத்தில் அவர்களை பற்றி தேட ஆரம்பித்தனர். படிக்க ஆரம்பித்தனர்.
2010ல் அவெஞ்சர்ஸ் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. ஈகோ பிடித்த பணக்கார அறிவாளி, கோபத்தைக் கட்டுக்குள் வைக்க பாடுபடும் விஞ்ஞானி, 1940ல் இருந்து இன்னும் வயதாகாமல் தேசத்திற்கு தன்னை அர்ப்பணித்த வீரன், வேற்று கிரகத்தின் அரசனும் இடி மின்னலின் தலைவன் ஒருவன், விபரீத மருத்துவ முயற்சிகளாலான மேம்பட்ட உளவாளி ஒருவள், குறிபார்த்து அம்பு எய்வதிலும் சகல தற்காப்பு கலைகளிலும் கைத் தேர்ந்த மற்றொரு உளவாளி, இவர்களை கொண்டுத்தான் இதுவரை தான் கண்ட 10 வருட கனவின் முதல் கால்பகுதியின் (1/4) வெற்றியைக் 2012ல் அவெஞ்சர்ஸ் மூலம் கண்டார் அந்த மனிதர். முந்தைய இதே ஹீரோக்களின் தனித்தனி படங்களில் அதில் நடித்த நடிகர்களை கொண்டாடிய ரசிகர்கள், அவெஞ்சர்ஸில் படத்தின் இயக்குனர் ஜோஸ் வீடொனையும், தயாரிப்பாளரான அந்த மனிதரையும் புகழ்ந்து கொண்டாடினர். யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாததை முடித்துக் காட்டிவிட்டு, பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் அவெஞ்சர்ஸ் படத்தொடர்ச்சியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அத்தியாயத்தை செயல்படுத்தும் திட்டத்தில் அமைதியாக வேலை செய்யத் தொடங்கினார் அவர்.
![]() |
Joss Whedon (Director of Avengers 1& 2) |
தனது நிறுவனத்தின் தயாரிப்புகள் 2008ல் ஆரம்பித்து இன்று வரை மிகவும் வெற்றிகரமாக, புகழ் வாய்ந்ததாக, பில்லியன் அமெரிக்கா டாலர்களில் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டு தனிக் காட்டு ராஜாவாக திகழ்ந்து வந்தாலும், 2003ல் எவ்வாறு ஒரு சிறுப்பையன் போல் காமிக்ஸ் உலகமே கதி என கிடந்தாரோ, இப்போது அதே காமிக்ஸ் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உலகையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார். ஆனாலும் இந்த சலசலப்புகள் ஆர்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் இப்போது அந்த மனிதன் 4ம் அவெஞ்சர்ஸ் படத்தை எவ்வாறு மக்களுக்கு கொடுக்கலாம், எவ்வாறு அடுத்த தலைமுறைக்கான படங்களை வடிவமைக்கலாம் என்பதில் சிந்தனையில் மூழ்கி யோசித்துக் கொண்டிப்பார் அந்த அவெஞ்சர்ஸ் படங்களின் தந்தை/தலைவன்/பிதாமகன்.
அந்த தலைவனின் பெயர்- KEVIN FEIGE. மார்வெல் ஸ்டுடியோஸின் பெருமைமிகு President. MCUவின் அஸ்திவாரம். முன்னோடி. Kevin Feigeஇன் கலைப் பயணத்தை போலே நமது கனவுகள் எல்லாம் பலித்திட, எத்தனை தடைகள் வந்தாலும் அவை எல்லாவற்றையும் உடைத்து எறிந்து, தைரியமாக நம்பிக்கையாக முன்னேறி செல்வோமாக. கனவுகள் மெய்ப்படும்.