Tuesday, December 5, 2017

KABALI movie review

ரஜினியின் திரைவாழ்விலோ, தமிழ் திரைஉலகின் வரலாற்றிலோ 'பாட்ஷா' ஒரு மகுடம் என்றே சொல்லலாம் (ரீமேக் படமாகவே இருந்தாலும்). தமிழ் சினிமா காலம்காலமாக கண்டு வந்த கதைக்களமாகவே இருந்தாலும் ரஜினிக்கே உரித்தான நடையாலும் சிரிப்பாலும் ஸ்டைலாலும், பாட்ஷா தனித்தன்மை வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது இப்போ வரை. ஒரு தெறிக்கும் இசையோடு, தூரத்தில், ஸ்லோ-மோசனில் முன்னே ஹீரோ நடக்க, பின்னே நான்கு பேர் தொடர்ந்து வர, அப்பிடியே ஸ்க்ரீனில் முன் ஹீரோ வந்து நிற்கும் காட்சி இல்லாத 'மாஸ்' படங்களே இப்போ தமிழ் சினிமாவில் இல்லை. அதே போல் பஞ்ச் வசனங்களும், அதிரவைக்கும் ஒரு பிளாஷ்-பேக்கும், ஒபெனிங் மாஸ் பாடல், ஒரு சோக பாடல், ரெண்டு டூயட், ரெண்டு குத்து பாடல் என தமிழ் சினிமாவிற்கென, பாட்ஷா ஒரு இலக்கணத்தை வகுத்துவிட்டு சென்றது. அதன் பின் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களும் அதே 'பெரிய டான்' கதைகளத்தை பிய்த்து கொத்துப் பரோட்டா போட்டாயிற்று.

சில வருடங்கள் முன்பு 'பாட்ஷா'வின் இயக்குனர் 'சுரேஷ் கிருஷ்ணா', ரஜினியிடம் 'பாட்ஷா 2' கதை ஒன்றை சொன்னதாகவும் அதனை ரஜினி வேண்டாம் என சொல்லி பின்பு அது அஜித்ற்கு சென்று அவரும் அதை நிராகரித்ததாக தகவல். அதே சமயம் பாட்ஷா திரைப்படம் டிவியில் ஒளிபரப்பிய நாட்களில் எல்லாம் ட்விட்டர், பேஸ்புக் என பல்வேறு சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் 'fav movie' 'blockbuster of the decade' 'டானுக்கு எல்லாம் டான்' என பயங்கரமாக ட்ரென்டாகியது. இந்த நேரத்தில் கோச்சடையான், லிங்கா என தொடர் தோல்விகள் ரஜினிக்கு. ஷங்கரின் எந்திரனின் இரண்டாம் பாகமும் தள்ளிப் போய்க்கொண்டு இருந்தமையால் இடைப்பட்ட காலத்தில் கட்டாயம் ஒரு படம் செய்தாக வேண்டாம் என ஒரு நிரப்பந்தம் ரஜினிக்கு ஏற்பட்டு இருக்கக்கூடும். மக்களிடம் பாட்ஷா, இக்கால இளைஞர்களிடம் கூட,  இன்னும் அழியாமல் இருந்ததை ரஜினி கவனித்து இருக்கக்கூடும். அதன் எதிரோளியாகவே ரஜினி 'கபாலி' கதையை ஒப்புகொண்டிருக்கக்கூடும். (பா. ரஞ்சித் ரஜினியிடம் இரண்டு கதை சொன்னதாகவும். ஒன்று கபாலி. இன்னொன்று அறிவியல் சார்ந்த கதை என இங்கே குறிப்பிடுகிறேன்)

உலகமெங்கும் ஐயாயிரம் தியேட்டர்களில் பதினைந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ், விமானத்தின் மேல் போஸ்டர் ஒட்டப்பட்ட முதல் இந்திய திரைப்படம், உருவம் பொறித்த வெள்ளி காசுகள், உலகில் முதன்முறையாக ஒரு படரிலீஸின் காரணமாக ஊழியிர்களுக்கு விடுமுறை அளித்த கார்பரேட் நிறுவனங்கள், டீசெர்களில் இமாலய சாதனை, தமிழ்சினிமா வரலாற்றில் காணாத டிக்கெட் விலை என "கபாலி" தொட்டதெல்லாம் உச்சமே. பொதுவாக தமிழ் சினிமாவின் மாபெரும் சாபக்கேடு- மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை வெறும் விளம்பரங்களால் ஏற்படுத்தும் படம் ஒன்று, அதனை திரையில் சரியாக பூர்த்தி செய்யத் தவறி மண்ணைக் கவ்வும். ஒரு சில படங்கள் விதிவிலக்காக இருந்தாலும், ப்ப்பூ!! இதுக்குதான் இம்புட்டு பில்ட்-அப்பா? என மக்கள் ஊதித் தள்ளி விட்ட படங்களின் எண்ணிக்கை ரொம்ப பெருசு. அந்த எண்ணிகையில் ரஜினிக்கு 'பாபா', கலைப்புலி தாணுவிற்கு 'கந்தசாமி' என இருவருக்கும் தலா ஒரு படம் இருக்கு. இப்போது இருவரும் இணைந்து கொடுத்துள்ள 'கபாலி', மண்ணை கவ்வியதா? விண்ணை முட்டியதா?. கீழே பார்ப்போம்.

தனது வயதிற்கு ஒத்த கதாபத்திரம் & கதைக்களத்திற்கும் ஒத்துக் கொண்ட ரஜினிற்கு ஒரு சபாஷ். அதனை வடிவமைத்த பா. ரஞ்சித்திற்கு டபுள் சபாஷ். ஆனாலும், இளமையான நடிகர்கள், அற்புதமான லோகேஷன்ஸ், திறமையான கலைஞர்கள், சூப்பர்ஸ்டார், தாணு என பக்காவான ஒரு டீம் கிடைத்தும் தனது சீரில்லா திரைக்கதையால் ரஞ்சித் தனக்கு கிடைக்கப்பெற்ற பொன்னான வாய்ப்பை வீணடித்து விட்டார் என தான் கூற வேண்டும். ரஞ்சித்தின் கதையில் ரஜினி இல்லாமல், ரஜினியின் இமேஜில் ரஞ்சித் வந்ததன் விளைவு தான் இந்த கபாலி. மேலே பார்த்த அந்த ஸ்லோ-மோசன் நடை, பஞ்ச்கள், சிரிப்பு, ஸ்டைல், பிளாஷ்-பேக், ஒபெனிங் பாடல் என எல்லாம் பட்டாசாக தெறித்தாலும் பலகீனமான திரைக்கதை இவை எதையும் படத்தை மனதோடு ஓட்ட வைக்கவில்லை.

விண்ணை முட்டியது:
1. தன்ஷிகா, ராதிகா ஆப்தே இருவரின் நடிப்பும் கதாபாத்திரமும்      
2. சந்தோஷ் நாராயணின் இசை & படத்தோடு ஒன்றிய பாடல்கள்
3. 90களின் ஸ்டைலில் சூப்பர் ஸ்டார் டைட்டில்கார்டு.& அறிமுக காட்சி
4. மலேசியா லோகேஷன்ஸ்
5.  துப்பாக்கி சூடு காட்சிகள் (குறிப்பாக இடைவெளிக்கு முன்)
6. முதிர்வயதிலும் சூப்பர்ஸ்டார்

மண்ணை கவ்வியது:
1.  திரைக்கதை
2. எளிதில் யூகிக்கக்கூடும் ட்விஸ்ட்கள்
3. உப்பு சப்பில்லாத வில்லன் & கோ பாத்திரங்கள்
4. கிளைமாக்ஸ் (எனக்கு மட்டும் தானோ?)

மொத்தத்தில், கபாலி எந்த ஒரு விதத்திலும் இன்னொரு பாட்ஷா இல்லை என்று புரிந்துக்கொண்டு படத்திற்கு செல்பவர்கள் படத்தினை ரசிப்பார்கள். இன்னொரு பாட்ஷா தான் எனக்கு வேணும் என எதிர்பார்பவர்கள் theatre பக்கம் கூட தலை வைக்க வேண்டாம். நான் ரெண்டாம் ரகம்.

(படம் ஓடவிட்டால் அதற்கு வீண் விளம்பரம் மட்டுமே காரணம் என நாம் நம்புவது முட்டாள்தனம். அதுவும் ஒரு காரணமே. அம்புட்டு தான். ஆனாலும் கொஞ்சம் டூ டூ மச் தானோ?)

#KabaliFDFS
#SuperStar
#Kabali
#Rajini
#Meh

No comments:

Post a Comment

Ten years of Marvel Studios Part:2 (தமிழ்) (Disney & Fox merger)

WELCOME HOME X-MEN & FANTASTIC FOUR 1. வருஷம் 1995-96 . மார்வெல் காமிக்ஸ் நிறுவனம் கடும் நிதித் தட்டுப்பாட்டால் அவதிக்கு உள்ளானது....